அந்த ஏழு நிமிடங்கள்.... பெர்சிவரன்ஸ் தரையிறங்கிய ’திக் திக்’ வீடியோ...
சிவப்புக் கோளான செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி தரையிறங்கிய போது பதிவு செய்த வீடியோ மற்றும் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது, நாசா.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 - ம் தேதி, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அட்லஸ் ராக்கெட் மூலம் பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வூர்தியை விண்ணில் ஏவியது நாசா. விண்வெளியில் சுமார் 470 மில்லியன் கி.மீ தூரம் பயணித்து, மணிக்கு 19,000 கி.மீ வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த பெர்சிவரன்ஸ், கடந்த 18 - ம் தேதி செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் தனது பணியை பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி தொடங்கியுள்ள நிலையில், பெர்சிவரன்ஸ் தரையிறங்கியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோவை நாசா வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள மூன்று நிமிட வீடியோவில், பெர்சிவரன்ஸ் தரையிறங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆடியோவில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காற்று வீசும் சத்தமும் பதிவாகியுள்ளது.
வீடியோ காட்சியில், பாராசூட் பறக்கும் காட்சி மற்றும் ஆய்வூர்தியில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த சிறிய ராக்கெட் என்ஜின்களால் கிளறப்பட்ட மணல் மற்றும் பாறைத் துகள்களுக்கு மத்தியில் தரையிறங்குகிறது பெர்சிவரன்ஸ். பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் உதவியுடன் இந்த வீடீயோ மற்றும் ஆடியோ பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியில் இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இரு ரோபோ கரங்களும், 19 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியானது செவ்வாய் கிரகத்தின் பாறை மற்றும் மணல் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெர்சிவரன்ஸ் சேகரிக்கும் செவ்வாய் கிரக மாதிரிகள், எதிர்காலத்தில் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டும். அந்த ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் வாழ்ந்தனவா என்பதற்கான பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
Comments