புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.
புதுச்சேரியில் அடுத்தடுத்து அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேர் பதவி விலகினர். ஏற்கெனவே காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதுதவிர காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவின் எம்எல்ஏ வெங்கடேசனும் நேற்று ராஜினாமா செய்தார்.
33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையின் பலம் 26 ஆகக் குறைந்தது. காங்கிரசுக்கு 9 எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் 2 பேர், சுயேட்சை ஒருவர் என ஆளும் கூட்டணியின் பலம் 12 ஆகக் குறைந்தது. எனஆர்காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்கள், அதிமுகவிற்கு 4 எம்எல்ஏக்கள், பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் என எதிர்க்கட்சிகள் வரிசையில் 14 பேர் இருந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். இதற்காக, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிவார் என சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து, நாராயணசாமி நீண்ட உரையாற்றினார். முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீதும், மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீதும் அவர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமது அரசை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் புதிய அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதாகவும், ஆட்சியைக் கவிழ்க்க சதிசெய்திருப்பதாகவும் நாராயணசாமி கூறினார்.
நாராயணசாமி பேசி முடித்து அமர்வதற்குள்ளயே, நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உண்டா இல்லையா என வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டது. நீதிமன்றத் தீர்ப்புகளின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் வாக்குரிமை இருப்பதாகக் கூறிய சபாநாயகர் சிவக்கொழுந்து, நாராயணசாமி பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார்.
Comments