‘இனி பன்றி வளர்ப்பு தான் எதிர்காலம்’ - சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் பரிதாப நிலை!
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் ( Huawei ), நிதி நெருக்கடியை சமாளிக்கப் பன்றி வளர்த்தல் தொடர்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது...
சீனாவின் ஹூவாய் நிறுவனம் செல்போன் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. ஹூவாய் நிறுவனம் தயாரித்த ஹூவாய் மற்றும் ஹானர் பிராண்ட் ஸ்மார்ட் போன்கள் புகழ்பெற்றவை. 5ஜி தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கியது. இந்த சூழலில் தான் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் சிக்கிக்கொண்டது ஹூவாய்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்காக ஹூவாய் நிறுவனம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களை வேவு பார்ப்பதாகவும், அதனால் அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஹூவாய் நிறுவனத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்தார், முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப். இதையடுத்து, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பிரிட்டனும் ஹூவாய் நிறுவனத்தின் சேவைகளுக்குத் தடை விதித்தது. இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஹூவாய் நிறுவனம்.
இந்தத் தடைகளால், 5ஜி செல்போன் தயாரிப்புக்குத் தேவையான மைக்ரோசிப் கருவிகளை இறக்குமதி செய்ய முடியாததால், 4 ஜி வகை செல்போன்களை மட்டுமே தற்போது ஹூவாய் நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. இதன் காரணமாக 2020 - ம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஹூவாய் நிறுவனத்தின் விற்பனை 42 சதவிகிதம் அளவுக்குச் சரிந்தது.
மைக்ரோசிப் பற்றாக்குறை, விற்பனை பாதிப்பு ஆகிய காரணங்களால் ஹூவாய் நிறுவனம் தனது உற்பத்தியை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைத்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் தான், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஹூவாய், தகவல் தொழில்நுட்ப தொழிலுக்கு மாற்றாகப் பன்றி வளர்ப்புத் துறையில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பன்றி வளர்ப்புத் துறையைக் கொண்டுள்ள நாடாக இருக்கிறது சீனா. உலகளவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகளில் பாதிக்கும் மேல் சீனாவில் தான் உள்ளன. இதனால், பன்றி வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தி, பன்றிகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்றுகளை அடையாளம் காணுதல், வளர்ப்பு மற்றும் நடமாட்டத்தைக் கண்காணித்தல், பன்றிகளின் எடை, உணவு ஆகியவற்றைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது ஹூவாய். மேலும், மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே பன்றிகளுக்கும் முகமறிதல் (Facial recognition ) தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு பன்றிகளையும் கண்காணிக்க முடியும் என்கிறது ஹூவாய்.
பன்றி வளர்ப்போடு நிறுத்தாமல், சுரங்கத் தொழில் துறையிலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், குறைவான தொழிலாளர்கள், அதிக பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைச் சுரங்கத் தொழிலில் உறுதிப்படுத்த முடியும் என்று ஹூவாய் கூறியுள்ளது.
Comments