கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்: வேதனையில் விவசாயிகள்
கடலூர் மற்றும் புதுச்சேரியில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த சனியன்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வில்லியனூர் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தில்
மிதந்தன.
தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் கிராமப்பகுதிகளில் 500 ஏக்கர் வயல்வெளிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், புதுச்சேரி முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலூரில் பெய்த கனமழையால் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலைய சுரங்க பாதை தண்ணீரில் மூழ்கியது.
சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலை நகர், பரங்கிப் பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் 20 நாட்களுக்கும் மேலாக காத்துக்கிடந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதேபோல் குறிஞ்சிப்பாடி பகுதியில் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
Comments