எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா.. புதுச்சேரி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!
புதுச்சேரியில் அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ள நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து பேரவையில் முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால், ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலக வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இதையடுத்து, இன்று மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமி அரசுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோரும் பதவி ராஜினமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9ஆகவும், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் குறைந்து, சுயேச்சை எம்.எல்.ஏ.வுடன் சேர்த்து கூட்டணியின் பலம் 12 ஆக இருக்கிறது. ஆனால், நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து இன்று முடிவு செய்ய உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறஉள்ள நிலையில், அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியிருப்பது நாராயணசாமி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Comments