சேலம் மாவட்டம் தலைவாசலில் உருவான ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவின் முதல் பிரிவான கால்நடைப் பண்ணை வளாகத்தில், நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றைப் பதப்படுத்தவும், அவற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், சந்தைப்படுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ஏற்ற வகையில் 3-வது பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர மரபு திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளின் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும் இதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
1000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். 118 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் 5ஆவது கால்நடை மருத்துவக் கல்லூரியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
Comments