தீரன் படப் பாணியில் திருடிய கொள்ளையர்கள்... துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீசார்!
தீரன் பட பாணியில் வீடுகளில் கொள்ளை அடிக்கும் திருட்டு கும்பலை கைரேகை மூலம் தேடி பிடித்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த சத்திரப்பட்டியில் கடந்த 17ம் தேதி அன்று சேகர் என்பவரின் வீட்டில் 18 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினரிடம் சேகர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கைரேகையை வைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். இத்திருட்டுச் சம்பவத்தில் கரூரை சேர்ந்த ரத்தினகிரீஸ்வரன், குணசேகரன் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் ஆகியோர் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் பிடிப்பட்ட மூவரிடம் தங்களது பாணியில் தனி கவனிப்பில் விசாரிக்க ஆரம்பித்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்கள் மூவரும் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றபோது மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
அதன் பின்பு மூவரும் நண்பர்களாக கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல வீடுகளில் கொள்ளை அடித்ததும், அந்த மாவட்டங்களில் மூவர் மீதும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. தீரன் பட பாணியில் கொள்ளையடியப்பதே இவர்களின் வழக்கம். கரூரில் இருந்து லாரியில் மணல் அள்ளிக் கொண்டு, பிற மாவட்டங்களில் இறக்குவதற்காக செல்லும் வழியில் ஒவ்வொரு வீடுகளையும் நோட்டமிடும் இவர்கள் மணலை இறக்கி விட்டு மீண்டும் ஊர் திரும்பும்போது நோட்டமிட்ட வீடுகளுக்குச் சென்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து வருவார்கள் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சம்பவத்தன்று திண்டுக்கல்லில் மணல் இறக்குவதற்காக வந்த இவர்கள் மணலை இறக்கி விட்டு மீண்டும் கரூர் திரும்பியபோது கிரியம்பட்டியல் உள்ள சேகர் என்பவர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் கைரேகையை சேகரித்தனர். அந்த கைரேகையை வைத்து ஒப்பிடுகையில், இவர்கள் மூவருடைய கைரேகையும் அதில் ஒத்துப் போனதால் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தீரன் பட பாணியில் கொள்ளையடித்த கொள்ளையர்களை மிக துரிதமாக செயல்பட்டு அவர்களை கைது செய்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Comments