விடிய விடிய மழை வெள்ளக்காடான புதுச்சேரி..! வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..
கனமழையால் தத்தளித்து வரும் புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பருவம் தவறிய மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் நகரப் பகுதிகளான கோரிமேடு புதிய பேருந்து நிலையம், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளும் கிராம பகுதிகளான பாகூர் வில்லியனூர் அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.
வில்லியனூர் பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் பகுதியில் மீன் வாங்க வந்த சண்முகாபுரம் வடக்கு தெருவை சார்ந்த அசினாபேகம் என்ற பெண்ணின் இருசக்கர வாகனம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அதனை மீட்க மூயற்சித்தபோது, அசினாபேகமும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இருசக்கர வாகனம் கிடைத்துவிட்ட நிலையில் அசினாபேகத்தை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் புதுச்சேரி முழுவதும் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த தொடர் கனமழையால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் கிராமப்பகுதிகளில் 500 ஏக்கர் வயல்வெளிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதுள்ளதால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments