மின்சாரம் இல்ல தண்ணீர் இல்ல பனி மட்டும் தான் இருக்கு.... இது பெரும் பேரழிவு!

0 4008

டெக்சாஸ் மாகாணத்தில் பெய்து வரும் பனிப்பொழிவை பெரும் பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. அங்கு நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகிறது. காணும் இடமெல்லாம், வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் பனிப்பொழிவால் டெக்சாஸ் மக்கள் அவதிஅடைந்து வருகின்றனர்.

கடும் குளிரால் மின்சாரம் இல்லாமல் டெக்சாஸ் மக்கள் தவித்து வருகின்றனர். கரி அடுப்பில் சமைப்பது, பல அடுக்குகளில் உடைகள் அணிந்துகொண்டு கடுங்குளிரை சமாளிப்பது, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு உண்பது, தண்ணீரும் உறைந்து போனதால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருப்பது என்று பலரும் தவித்து வருகின்றனர்.

டெக்சாஸில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பிற மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கும் பொதுவாக பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பனிப்புயலால் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த பனிப்புயலை மனிதர்களே தாக்குபிடிக்க முடியாத நிலை உள்ளபோது, வாய் பேச முடியா விலங்குகளும் , பறவையினங்களும் மிக மோசமான அழிவை சந்தித்து வருகின்றன. மீன்கள் மற்றும் பறவையினங்கள் கடுமையான பனியால் இறந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் டெக்சாஸில் இவ்வாறு பனிப்பொழிவு அதிகரித்ததற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்டிக் பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக இந்த அசாதாரண பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் வானியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இது குறித்து ஒரு முடிவுக்கு வர நீண்ட கால ஆய்வு முடிவுகள் தேவை என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

சென்ற வருடம் முழுவதையும் கொரோனா தூக்கி கொண்டது. இந்த வருடம் எதிர்பாராத பனிப்பொழிவு. வரலாற்று நிகழ்வுகளுக்குள்ளேயே வாழ்வது அலுப்பூட்டுகிறது. இயல்பு வாழ்க்கை எப்போதுதான் வரும் என்று டெக்சஸ் மக்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்த நிலையில், கடும் பனி பொழிவுக் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனை பெரும் பேரழிவாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். டெக்சஸின் பனிப்புயல் தனிப்பட்ட ஒரு நிகழ்வா அல்லது எதிர்காலத்துக்கான பொது எச்சரிக்கையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments