ஆன்லைன் ஷாப்பிங்: போலி ஆன்லைன் வெப்சைட் பரிதாபங்கள்!
ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்களின் ஆசைகளை தூண்ட ஆஃபர்களை அள்ளி கொடுத்து முறைகேடுகளில் ஈடுப்பட்டு வரும் போலி வெப்சைட்டுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வளர்ந்து வரும் இன்றைய டிஜிட்டல் உலகில் , நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் ஆன் லைன் ஷாப்பிங். இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்து கொண்டே அலங்கார பொருட்கள் முதல் உணவு பொருட்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கி விடலாம். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவருகிறது.
இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் போலி வெப்சைட்டுகள், பிரபல பிராண்டட் வெப்சைட்டுகள் போலவே சில வார்த்தைகளை மட்டும் மாற்றி விளம்பரம் செய்து இணையத்தில் உலா வருகின்றன. அவர்கள் காசா பணமா, சும்மா அடிச்சுவிடுவோம் என்பது போல பல OFFER களை அள்ளித் தெளிக்கின்றனர்.
”ஒருத்தன ஏமாத்தனும்னா முதல்ல அவனோட ஆசையை தூண்டனும் ” என்ற சதுரங்க வேட்டை பாணியை பாஃலோ செய்கின்றனர் இந்த போலி வெப்சைட் மோசடியர்கள்.
உதாரணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை, 80 சதவீகித ஆஃபர் என்று சொல்லி 1000 ரூபாய்க்கு தருவதாகவும், போனா வராது பொழுது போனா கிடைக்காது என்பது போலவும் விளம்பரம் செய்கின்றனர்.
அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிற வேறொன்றும் இல்லை என நம்புபவர்கள் தான் அவர்களின் Target.
அப்படி 5ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள், ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குதே என்ற ஆசையில் பலரும் ஆர்டர் செய்து டெலிவரிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அப்படி ஆர்டர் செய்த பொருட்கள் எல்லாம் காந்தி கணக்கே.
30 முதல் 40 நாட்கள் ஆன போதிலும் பொருட்கள் பொருள் வீடு தேடி வருவதே இல்லை. அதன் பிறகு மீண்டும் வெப்சைட்டுக்கு உள்ளே சென்று சோதித்து பார்க்கும் போதுதான், அது போலி வெப்சைட் என்பது தெரிய வருகிறது. மேலும் அந்த போலி வெப்சைட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, போன்றவை அனைத்தும் போலியே. அப்படி ஏமாறுபவர்களில் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருமே அடக்கம் தான்.
தனிநபருக்கு, ஆயிரம் என்பது குறைவான தொகையாக இருந்தாலும் பல ஆயிரம் பேரிடம் அவர்கள் ஏமாற்றும் போது லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றனர்...
இவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்பாக அது உண்மையான விற்பனை இணைய தளமா அல்லது போலியா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவேண்டுமென சைபர் செக்குயூரிட்டி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் Cash on delivery option முறையில் , பொருட்களை ஆர்டர் செய்வது மிகவும் பாதுகாப்பானது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் www.consumerhelpline.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கலாம். அதேப்போல் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல்நிலையங்களில் புகார் அளிக்கலாம் எனவும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Comments