டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் இன்ஜீனில் தீ... சாமர்த்தியமாக செயல்பட்டு 231 பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானி!
அமெரிக்காவில் டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் விமானத்தின் இன்ஜீனில் தீ பற்றியது. எனினும், விமானி சமார்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவில் கொலோரோடா மாகாணத் தலைநகர் டெனவர் விமான நிலையத்திலிருந்து யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 231 பயணிகள் மற்றும் 10 சிப்பந்திகளுடன் ஹோனாலுலு நகருக்கு புறப்பட்டது. டேப் ஆப் ஆன சிறிது நேரத்தில், விமானத்தில் வலது புற இன்ஜீனில் தீ பற்றியது. இன்ஜீன் முழுவதும் தீ எரிய தொடங்கியது. தொடர்ந்து, இன்ஜீனின் பாகங்கள் கீழே விழத் தொடங்கின.
உடனடியாக , சுதாரித்துக் கொண்ட விமானி , விமானத்தை மீண்டும் டெனவர் விமான நிலையத்துக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் இன்ஜீன் பாகங்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இது தொடர்பாக, அமெரிக்க போக்குவரத்து பாதுகப்பு கழகம் கூறுகையில், 'தரையில் சிதறி கிடக்கும் இன்ஜீன் பாகங்களை யாரும் தொட வேண்டாம். இந்த பாகங்கள் ஆய்வுக்கு தேவைப்படுகிறது' என்று தெரிவித்துள்ளது.
இன்ஜீனில் தீ பற்றிய விமானம் 26 ஆண்டுகள் பழமையானது. விமானத்தில் Pratt & WhitneY நிறுவனத்தின் PW4000 ரக இன்ஜீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. இன்ஜீனில் உள்ள மின் விசிறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக, யுனைடெட் ஏர்லைன்ஸில் விமானிகள் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத இயந்திர செயலிழப்பின் போதும், பாதுகாப்பாக விமானத்தை ததைரயிறக்கிய விமானிகளை பாராட்டுகிறோம். விமானத்தின் பைலட்டுகள், சிப்பந்திகள் காட்டிய மகத்தான குழுப்பணிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற அரிதான இயந்திர செயலிழப்பின் போதும் விமானிகள் தங்கள் திறமையை நிரூபித்து பயணிகளின் உயிரை பாதுகாத்துள்ளனர். எங்கள் விமானிகளை தகுதியானவர்களாகவும் திறமைமிக்கவர்களாக இருப்பதை கண்டு பெருமை கொள்கிறோம் '' என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு யுனைடெட் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் ஹோனலுலு நகர விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இன்ஜீன் செயலிழந்தது. அப்போதும், விமானிகள் திறம்பட செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் என்பது நினைவு கூறத்தக்கது.
Comments