'அவளை கொன்று புதைத்தது போல உன்னையும் செய்துவிடுவேன்!'- குழந்தைக்கு கூட இரக்கம் காட்டாத பாபநாசம் 'குடும்பம்

0 37907
கொலை செய்யப்பட்ட கோமதி அம்மாள், குழந்தை உத்ரா

தென்காசி அருகே வட்டிக்கு பணம் கொடுத்து வந்த ராணுவ வீரரின் மாமியார், மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி கோமதி அம்மாள் (வயது 55). இவர்களுடைய மகள் சீதாலட்சுமிக்கும் கடபோகத்தியைச் சேர்ந்த முருகனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு உத்ரா என்ற ஒன்றரை வயது மகள் உள்ளார். ராணுவவீரான முருகன் காஷ்மீர் மாநிலத்தில் பணியில் இருந்தார். கோமதி அம்மாள் , தன் பேத்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்துள்ளார். இதனால், பேத்தியை தன் வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். குழந்தை உத்ராவின் தாய் சீதா லட்சுமி கடபோகத்தியிலுள்ள தன் கணவர் வீட்டில் வசித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கோமதி அம்மாள், பேத்தி உத்ரா ஆகியோர் காணாமல் போனார்கள். தென்காசி காவல் நிலையத்தில் மனைவி, பேத்தியை கண்டுபிடித்து தருமாறு உச்சிமாகாளி புகாரளித்தார். மாமியார், மகள் மாயமானதால், காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முருகனும் அவர்களை தேடினார். விசாரித்த போது, கடைசியாக கோமதி அம்மாள் தன் பேத்தியுடன் வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த பாண்டியம்மாளின் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. பாண்டியம்மாளிடத்தில் விசாரித்த போது, தான் கோமதியம்மாளிடத்தில் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாகவும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அவர் சென்று விட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. கோமதி அம்மாளிடத்தில் வட்டிக்கு வாங்கியது போல, உள்ளுரிலும் பலரிடத்தில் பாண்டியம்மாள் கடன் வாங்கியிருந்துள்ளார். அப்படி, பணம் கேட்க வந்தவரிடத்தில்,' இப்படித்தான் எங்கிட்ட அடிக்கடி வட்டி கேட்ட கோமதியம்மாளை கொன்று புதைத்தேன்... உன்னையும் அப்படி செய்து விடுவேன் ' என்று வீரபாண்டியம்மாள் மிரட்டியுள்ளார். கொடுத்த பணத்தை கேட்டதற்கு பாண்டியம்மாள் இப்படி தன்னை மிரட்டுவதாக வட்டிக்கு பணம் கொடுத்தவர் மது போதையில் புலம்பியுள்ளார். இந்த தகவல் போலீசுக்கு தெரிய வர, உடனடியாக பாண்டியம்மாளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த உள்ளுர்காரரை தூக்கியது. அவரிடத்தில் நடத்திய விசாரணையில், பாண்டியம்மாள் அப்படி கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, வீரபாண்டியம்மாள், அவருடைய மகன் சுரேஷ், மகள்கள் மகேசுவரி, இசக்கியம்மாள் இவர்களின் உறவினர் பூதத்தன் ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். கடந்த 19 ஆம் தேதி இவர்களை கைது செய்த போலீஸார், இரவு முழுவதும் விசாரித்தனர்.


விசாரணையில், மகன் சுரேஷ் திருமணத்துக்காக இருபதாயிரம் ஆயிரம் ரூபாய் பணத்தை  கோமதி அம்மாளிடத்தில் கடன் வாங்கினேன். வட்டிக்கு மேல் வட்டி வாங்கியதால் ஆத்திரத்தில் இருந்தேன். அப்போது, மீண்டும் வட்டி கேட்டு கோமதி அம்மாள் தொல்லை செய்தார். அதனால் 'வீட்டுக்கு வாருங்கள் பணம் தருகிறேன் ' என்று அழைத்தேன். பணம் வாங்க வந்த கோமதியம்மாள், குழந்தை உத்ரா ஆகியோரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்'' என்று பாண்டியம்மாள் கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மத்தளம்பாறை- முத்துமாலைரபுரம் சாலையில், கோமதி அம்மாள் , உத்ராவின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. தொடர்ந்து, வீரபாண்டியம்மாள், அவருடைய மகன் சுரேஷ், மகள்கள் மகேஸ்வரி, இசக்கியம்மாள் பூதத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கோமதியம்மாள், குழந்தை உத்திரா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பணத்தகராறில் குடும்பமே சேர்ந்து பாட்டி மற்றும் பேத்தியை சிறிதளவு கூட இரக்கம் இல்லாமல்  கொலை செய்த சம்பவம் தென்காசியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments