காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 2836
காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், 3 ஆயிரத்து 384 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை, கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக குண்டாற்றுடன் இணைக்கும் வகையில் 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாற்றுடன் இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

முதல்கட்டமாக 6 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும்.

இந்தத் திட்டங்களை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

இதனுடன் காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் 3 ஆயிரத்து 384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளன.

இதனையும் முதலமைச்சர் இன்று நடக்கும் விழாவில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கிலோ மீட்டர் நீளமுள்ள 21 ஆறுகளின், மொத்த பாசன பரப்பான 4 லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும் என்பதும், காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 விழுக்காடு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments