தாய் கடைக்கு அழைத்து செல்லாததால் மனமுடைந்த சிறுமி... உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்!
மன அழுத்தம், மன உளைச்சல், தோல்வியை ஏற்காத மனப்பக்குவம், பிடித்தது கிடைக்காத விரக்தி போன்ற காரணங்களால் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கில் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி நிலையில் குழந்தைகளும், முதியவர்களும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலும் கொரோனா முற்றிலும் ஒழியாததால் சில பெற்றோர் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அழைத்துவர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தாம்பரம் அருகே பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தாய் கடைக்கு அழைத்து செல்லாத ஆத்திரத்தில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் சரவணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார்(46) - காயத்திரி(40) தம்பதியினர். இவர்களுக்கு 15 வயதான அபிராமி என்ற ஒரு மகள் உள்ளார். அங்குள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார் அபிராமி. இந்த நிலையில் வழக்கம் போல் தந்தை சிவகுமார் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். மாணவி அபிராமி கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார்.
வெள்ளியன்று அபிராமியின் தாயார் காயத்ரி வீட்டிலிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது தன்னுடன் கடைக்கு வர விருப்பம் தெரிவித்த மகளை அழைத்து செல்ல மறுத்துவிட்டார். பின்னர் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அபிராமி படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபிராமியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி அபிராமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments