மத்திய-மாநில கூட்டாட்சி நாட்டுக்கே வளர்ச்சி -பிரதமர் மோடி
ஒருங்கிணைந்த செயல்பாடே ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை என்றும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
நிதி ஆயோக்கின் ஆட்சி மன்ற குழுவின் 6-வது கூட்டம் காணொலியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மாநில முதலமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இதுவரை மாநிலமாக பங்கேற்று வந்த காஷ்மீர், யூனியன் பிரதேசமாக பங்கேற்றது. காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் முதல்முறையாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டது. விவசாயம் , உட்கட்டமைப்பு, உற்பத்தி, மனித வள மேம்பாடு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க, தனியார் துறையினர் உற்சாகத்துடன் முன் வருவதாக கூறிய அவர், தற்சார்பு இந்தியா திட்டத்தில் தனியார் துறையினருக்கு ஊக்கம் கொடுத்து, தேவையான வாய்ப்புகளை அளிப்பது நமது கடமை என்றார்.
இந்தியா போன்ற இளம்வயதினர் அதிகம் வாழும் நாட்டின் உயர் விருப்பங்களை மனதில் கொண்டு, நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். மாநிலங்களில் உள்ள ஆதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை மாநிலங்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொண்டு அதிகபட்ச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
15வது நிதிக் குழுவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொருளாதார ஆதாரங்கள் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று பிரதமர் அறிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார். இதற்கு எல்லா மாநிலங்களும் தங்கள் பகுதியில் பருவநிலைக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
உற்பத்திப் பொருட்கள் வீணாவதைத் தவிர்க்க, சேமிப்புக் கிடங்கு மற்றும் பதப்படுத்தல் வசதிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மாநிலங்கள் இடையே மட்டுமின்றி மாவட்டங்கள் இடையேயும் வளர்ச்சிக்கான போட்டி இருக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் இடையேயான கூட்டாட்சி முறை ஒத்துழைப்பே நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.
Comments