சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கூடுதல் கட்டணம் பெறவில்லை என்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கூடுதல் கட்டணம் பெறவில்லை என்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கூடுதல் கட்டணம் பெறும் முகமைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லோகரங்கன் என்பவர் வழக்குத் தொடுத்தார். அந்த மனுவில் சிலிண்டர் வழங்குவதற்கான கட்டணத்தைப் பணியாளர்களுக்கு வழங்காமல் முகமைகளே எடுத்துக் கொண்டு, அதற்குப் பதில் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் பெறக் கட்டாயப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் கட்டணம் பெற்றால் புகார் அளிக்கலாம் என்றும், புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எண்ணெய் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், சிலிண்டர் வழங்கக் கூடுதல் கட்டணம் பெறவில்லை என்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
Comments