காதல் ஜோடியிடம் கைவரிசை...பணம் இல்லை என்றால் என்ன, கூகுள் பே இருக்கே!
திருத்தணி அருகே காதல் ஜோடியை ஏமாற்றி நூதன முறையில் பணம் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பிரசாத். கடந்த மாதம் இவர், திருத்தணி அருகே கன்னிக்கோயில் சாலையில் உள்ள மலைப்பகுதியில், தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்குத் தோன்றிய மர்ம நபரைக் கண்டு ராம்பிரசாத்தும் அவர் காதலியும் அதிர்ச்சியடைந்தனர்
தொடர்ந்து, அந்த மர்ம நபர் தான் ஒரு வனத்துறை அதிகாரி என்றும், ராம்பிரசாத்தும் அவர் காதலியும் அமர்ந்திருந்த இடம், தடை செய்யப்பட்ட பகுதி என்று கூறியுள்ளார்.
மேலும் , ராம்பிரசாத் 10 ,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார் .
திடீரென தோன்றிய மர்ம நபரால், பதற்றமடைந்த அந்த காதல் ஜோடி செய்வதறியாது திகைத்தனர். தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறவே, ராம்பிரசாத்தின் போனை பறித்த அந்த மர்ம நபர், கூகுள் பே மூலம் தனக்குப் பணம் அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றார்.
பதறிப்போன அந்த காதல் ஜோடியும், தங்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து உடனே சென்றனர். சிறுது நேரம் கழித்து ராம்பிரசாத் தனது போனை பார்த்தபோது அவரது கூகுள் பே கணக்கிலிருந்து 25 ,000 ரூபாய் குறைந்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் பணியாற்றும் தனது நண்பர் விக்னேஷின் உதவியை நாடியுள்ளார் ராம்பிரசாத்.
பணம் அனுப்பப்பட்ட கூகுள் பே எண்ணிற்குக் கால் செய்தார் விக்னேஷ். தான் ஒரு காவல் துறை அதிகாரி எனத விக்னேஷ் தன்னை அறிமுகம் செய்ததும் பயந்துபோன அந்த நபர், 25 ,000 ரூபாயை ராம்பிரசாத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், அந்த மர்ம நபர் கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருத்தணி பேருந்து நிலையத்தில் , ராம்பிரசாத்தை பார்த்துள்ளான் ரமேஷ். தன்னை போலீஸிடம் சிக்கவைத்ததால் ராம்பிரசாத்தின் மீது ஆத்திரத்திலிருந்த அவன், "உன்னை அன்றே காலி செய்திருக்க வேண்டும்" என்று ராம்பிரசாத்தை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராம்பிரசாத் , திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், ரமேஷை தேடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments