பாங்காங்சோ ஏரி பகுதியில் படை விலக்கம் நிறைவு... தொடங்குகிறது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை..!
கிழக்கு லடாக்கில் பாங்காங்சோ ஏரி பகுதியில் முதல்கட்டமாக படை விலக்கம் நிறைவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இதையடுத்து பதற்றத்தை தணித்து படைகளை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே 9 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் ஒப்புக்கொண்டபடி, கடந்த 10 ஆம் தேதி இரு நாடுகளின் ராணுவமும் படைகளை விலக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கின. பாங்காங் சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள 4 ஆம் மலை முகடு வரை இந்திய படைகள் பின் வாங்கியுள்ளன. அதே போல எட்டாம் மலை முகடு வரை சீன படைகள் பின்வாங்கியுள்ளன.
6 மற்றும் 7 மலை முகடுக்கு இடையில் சீனா அமைத்திருந்த படகுத்துறை, ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகியவற்றை அந்நாட்டு ராணுவம் அகற்றி உள்ளது. சீன பீரங்கிகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
வீரர்கள், பீரங்கிகள் வெளியேறுவது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. முதல்கட்ட படைவிலக்கம் நிறைவு பெற்றதை அடுத்து, அடுத்து கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள மற்ற மலை முகடுகளில் இருந்து வீரர்களை பின்வாங்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விவாதிக்க சனிக்கிழமை 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் உள்ள சுசூல் அருகே மோல்டா என்ற இடத்தில் காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Comments