உயிர்பலி வாங்கிய மூடநம்பிக்கை.. பெற்ற மகளுக்கே எமனான தந்தை..?
ராமநாதபுரம் அருகே டைபாய்டு காய்ச்சல் பாதித்த மகளுக்கு மருத்துவம் பார்க்காமல், பேய் பிடித்ததாக எண்ணி கோடங்கியிடம் அழைத்துச் சென்று சாட்டையடி வாங்கிக் கொடுத்த தந்தையால் மகள் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மனைவி கவிதா 9 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து இறந்துவிட்டார். கோபிநாத் என்ற மகனோடும், கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வந்த தாரணி என்ற மகளோடும் வசித்து வந்தார் வீரசெல்வம்.
சில மாதங்களுக்கு முன் வீரசெல்வத்தின் வீட்டிலிருந்த ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவை அடுத்தடுத்து இறந்திருக்கின்றன. அதற்கு தற்கொலை செய்து இறந்துபோன அவரது மனைவி கவிதாவின் ஆவிதான் காரணம் என சிலர் வீர செல்வத்திடம் தெரிவித்துள்ளனர். அதனை வீரசெல்வமும் நம்பிய நிலையில், மகள் தாரணிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கவிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு தாரணி சென்று வந்ததாகவும் எனவே கவிதாதான் ஆவியாக வந்து மகளைப் பிடித்திருக்கிறார் என்றும் அதே சிலர் வீரசெல்வத்திடம் கூறியுள்ளனர்.
அதனை உண்மையென நம்பிய வீரசெல்வம் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், முதலாவதாக திருப்பாலைக்குடி அருகேயுள்ள கோடங்கியிடமும் அதனை அடுத்து வாணி என்ற கிராமத்திலுள்ள பெண் பூசாரியிடமும் மகள் தாரணியை அழைத்துச் சென்றுள்ளார். பெண் பூசாரி பேய் ஓட்டுகிறேன் பேர்வழி என காய்ச்சலில் தவித்த தாரணியை சாட்டை மற்றும் குச்சியால் அடித்தார் என்று கூறப்படுகிறது. இதில் மயங்கிச் சரிந்த தாரணியின் மூக்கில் மிளகாய் வற்றலை சுட்டு ஆவியைக் காட்டியதாகவும் அதன் பிறகும் மயக்கம் தெளியாத நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. தாரணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருந்து, மாத்திரைகளை கொடுத்துள்ளனர்.
ஆனால் மீண்டும் ஒருமுறை பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்துச் சென்றால் சரியாகி விடும் என வீரசெல்வம் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அன்று இரவே, தாரணிக்கு காய்ச்சல் உச்சத்தை தொட்டிருக்கிறது. உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரசெல்வம், அவரது மகன், பேய் ஓட்டிய இரண்டு கோடங்கிகள் என அத்தனை பேரிடமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Comments