பாங்காங்சோ ஏரிக் கரையில் படை விலக்க நடவடிக்கைகள் நிறைவு : நாளை இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளிடையே 10ஆம் சுற்றுப் பேச்சு
கிழக்கு லடாக் எல்லையில், பாங்காங்சோ ஏரிக் கரையில் படை விலக்க நடவடிக்கைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளிடையே நாளை 10ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகளிடையே நடைபெற்ற 9ஆம் சுற்றுபேச்சுவார்த்தையில், முதல் கட்ட படைவிலக்க உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரிக் கரைகளில் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த படைவிலக்கம் முடிவடைந்த 48 மணி நேரத்திற்குள் 10ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தியா-சீனா ராணுவ படைப்பிரிவு தளபதிகள் நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில், தெப்சாங் சமவெளி, கோக்ரா-ஹாட்ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகள் குறித்து பேச்சு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments