பெட்ரோல் இருக்கட்டும்... கொசுறுவாக வாங்கும் கறிவேப்பிலை விலை கிலோ ரூ.120
காய்கறி கடைகள் மற்றும் சந்தைகளில் பொதுமக்கள் கொசுறுவாக வாங்கும் கறிவேப்பிலை விலை ரூ 120 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வரும் நிலையில் காய்கனிகளும் கணிசமாக விலை உயரத் தொடங்கியுள்ளன. மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையும் இந்த விலை உயர்வில் இருந்து தப்பவில்லை.
மதுரை ஒருங்கிணைந்த காய் கனி வணிக வளாகத்தில் கடந்த சில தினங்களாக கறி வேப்பிலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 லிருந்து ரூ.60 வரை விற்பனையானது. தற்போது , கறிவேப்பிலை கிலோ 120 ஆக உயர்ந்துள்ளது. கடைகளில் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள் இலவசமாக கறிவேப்பிலையை வாங்கி செல்வார்கள். தற்போது கொசுறுவாக வாங்கும் கறிவேப்பிலைக்கு ரூ.10 கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது . இதனால், கறிவேப்பிலை இல்லாம சமையல் செய்யப்படுவதாக சாமானிய மக்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர். அதே போன்று , கொத்தமல்லி கட்டு ஒன்று ரூ. 30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை சந்தையில் இலந்தை பழமும் கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் அழகர்கோவில் வட்டாரங்களில் மா, கொய்யா, வாழை, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் மகசூல் செய்து மதுரையில் உள்ள ஒருங்கிணைந்த பழ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளது. அரிதாக கிடைக்கும் இலந்தை பழத்தை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ இலந்தை பழம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ரூ.10-க்கு கூறுகட்டியும் விற்பனை செய்கின்றனர்.
Comments