வாழ்நாள் முழுவதும் குண்டர்களுடன் போராட்டம்... உயிருக்கும் கலங்காத நேர்மை! - வக்கீல் தம்பதி கொலையில் அதிர்ச்சி பின்னணி!

0 38717
கொலை செய்யப்பட்ட வாமனராவ், நாகமணி

வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காக போராடிய தெலங்கானாவைச் சேர்ந்த வக்கீல் தம்பதி வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் அருகிலுள்ள பெத்தப்பள்ளியில் காரில் சென்று கொண்டிருந்த வக்கீல் தம்பதிகளான கட்டு வாமனராவ் அவரின் மனைவி நாகமணி ஆகியோரை வழிமறித்த மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. நடு ரோட்டில் பலர் முன்னிலையில் இந்த கொலைகள் நடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த ராமகுண்டம் போலீசார் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மண்டல தலைவரான குண்டா சீனு உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர். கொலை சம்பவத்தை கண்டித்து தெலங்கானா மாநிலத்தில் வக்கீல்கள் போராட்டம் வெடித்தது.

இதனால், தெலுங்கானா மாநில உயர் நீதிமன்றம் வக்கீல் தம்பதி கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்து, அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சமூக ஆர்வலர்களான இந்த வக்கீல் தம்பதி தெலுங்கானாவில் நடைபெற்ற பல்வேறு அத்துமீறல்கள், முறைகேடுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று, நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வந்துள்ளனர்.

இதனால் , குண்டர்கள் பலர் தம்பதி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியது மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியது தொடர்பாக கொலை செய்யப்பட்ட வக்கீல் தம்பதிக்கும், முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் குண்டா சீனுவுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக வாமனராவை , கொலை செய்யப் போவதாக குண்டா சீனு மிரட்டி வந்துள்ளான். ஆனால், யாரின் மிரட்டல் உருட்டலுக்கும் பயப்படாமல் கடைசி வரை இந்த தம்பதி நேர்மைக்காக போராடி வந்துள்ளனர்.image

இந்த நிலையில்தான், அவர்கள் காரில் செல்லும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிர் போகும் தருவாயில் வக்கீல் வாமனராவ், தன் வாக்குமூலத்தில் குண்டா சீனுதான் தன் கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார். அவரின் வாக்குமூலம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. போலீஸார் தேடி வந்த நிலையில் குண்டா சீனு, அகபாகா குமார், வசந்தா ராவ் ஆகியோர் போலீசில் சரணைடைந்தனர்.

விசாரணையில் , தொழில்முறை கொலையாளிகள் உதவியுடன் வக்கீல் தம்பதி கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து வக்கீல் தம்பதி காரில் புறப்பட்டதும் அவர்களை பின் தொடர்ந்து மற்றோரு காரில் தொழில்முறை கொலையாளிகள் சென்றுள்ளனர். பின்னர், வக்கீல் தம்பதி சென்ற காரை மறித்துள்ளனர். காரின் ஜன்னலை உடைத்த, குண்டா சீனு ஜன்னல் கண்ணாடியை உடைத்து வாமன ராவை குத்தியுள்ளார் . இதை தடுக்க முயன்ற நாகமணிக்கும் கத்திக்குத்து விழுந்தது. காரில் இருந்து இறங்கி வாமனராவ் ஓட தொடங்கியுள்ளார். அப்போது, அணைவரும் சேர்ந்து அவரை நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர். நாகமணியும் காரிலேயே சடலமாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், '' தெலங்கானா உயர் நீதிமன்றம் வக்கீல் தம்பதிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 2020 - ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக. வக்கீல் தம்பதி சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று போராடி வந்தனர். இதனால், டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குண்டர்கள் உதவியுடன் வக்கீல் தம்பதியை கொலை செய்து விட்டனர்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments