நெல்லை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி வெட்டிப் படுகொலை… குடும்பத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டதாகத் தகவல்

0 6491
நெல்லை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி வெட்டிப் படுகொலை… குடும்பத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டதாகத் தகவல்

நெல்லை மாவட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லத்துரை சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சிலர், செல்லத்துரையை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து செல்லத்துரையின் உடல், உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்லத்துரையின் உறவினர்களும், திமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செல்லத்துரைக்கும் அவரது வீட்டருகே உள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த வாரம் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் சிலருடன் செல்லத்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

எனவே, அதன் காரணமாக கொலை நிகழ்ந்ததா என்றும்? அல்லது குடும்பத் தகராறு மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொலை நடந்ததா என்றும் முக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

செல்லத்துரை படுகொலையைத் தொடர்ந்து முக்கூடல் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments