மாணிக்கம் நாராயணனுக்கு இது தான் அஜீத்தின் பதில்..! மக்கள் ஆதங்கத்தை அறிந்ததால் மவுனம்

0 72194
மாணிக்கம் நாராயணனுக்கு இது தான் அஜீத்தின் பதில்..! மக்கள் ஆதங்கத்தை அறிந்ததால் மவுனம்

 சினிமா தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், அஜீத்திற்கு 25 வருடங்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதற்கான ஆதாரத்தை வெளியிட்டு கடுமையாக விமர்சித்த நிலையில், இதற்கு அஜீத் அளித்துள்ள பதில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

சரத்குமார் நடித்த கூலி, விஜய்யின் மாண்புமிகு மாணவன், கார்த்திக் நடித்த சீனு, கமல் ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் செவன்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் மாணிக்கம் நாராயணன்.

இவரிடம் கடந்த 1996 ஆம் ஆண்டு பெற்றோரை வெளிநாடு அழைத்துச்செல்ல நடிகர் அஜீத் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்த பணத்தை தான் அடுத்ததாக நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, அடுத்த படத்துக்கான சம்பளத் தொகையில் கழித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த அஜீத், இதற்காக தான் தயாரித்த சீனு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதாக தெரிவித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் , அந்த பணத்தை அஜீத் தற்போது வரை திருப்பிதரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்

தன்னிடம் அஜீத் 2 லட்சம் ரூபாய் பணம் பெற்றதற்கான வங்கி காசோலை ஆதாரத்தை வெளியிட்ட மாணிக்கம் நாராயணன், அஜீத்தை ஜென்டில்மேன் என்று சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது என்று கடுமையாக சாடியதோடு, இத்தனை ஆண்டுகளுக்கான வட்டியோடு சேர்த்து தன்னுடைய பணத்தை அஜீத்திடம் இருந்து வசூலிப்பேன் என்றார்.

தங்கள் சங்கத்தில் புகார் அளியுங்கள் இந்த பணத்திற்காக வலிமை படத்தை முடக்கிவிடலாம் என்று சிலர் கூறுகின்றனர். அதனை தான் ஒரு போதும் செய்ய மாட்டேன், ஏனென்றால், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கலை பணம் கொடுத்து தீர்த்து வைத்தவன், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்தவன் என்பதால் எனது பணத்தை மட்டுமே திரும்பபெறுவேன் என்று உறுதிபடக்கூறினார்

இந்த குற்றச்சாட்டுக்குறித்து அஜீத் தரப்பில் விசாரித்த போது, அஜீத் கூறிய வார்த்தைகள் வியப்பை ஏற்படுத்தியது...!

வயதில் மூத்த தயாரிப்பாளர் என்ன காரணத்துக்காக இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை, என்னை களங்கப்படுத்துவதில் அவருக்கு சந்தோஷம் என்றால் இருந்து விட்டு போகட்டும் அவருக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும், ஏற்கனவே நாட்டில் சினிமாவை விட முக்கியமான பிரச்சனைகள் ஏராளமாய் இருக்க மக்கள் சினிமாக்காரன் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நாம் ஏதாவது பேசினால் நம் மீது மக்களுக்கு கூடுதல் கோபம் தான் உருவாகும் எனவே இந்த விவகாரத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்று அஜீத் கேட்டுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மாணிக்கம் நாராயணன் தனது மகனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க அஜீத்தை காண சென்றதாகவும் , மார்க்கெட் உச்சத்தில் இருந்த அஜீத், மாணிக்கம் நாராயணனை சந்திக்கவில்லை என்று கூறப்படுகின்றது. திருமணத்திற்கும் அஜீத் செல்லவில்லை இந்த கோபத்தில் சில தினங்களில் தனக்கு தர வேண்டிய 6 லட்சம் ரூபாய் குறித்து அஜீத்திற்கு நினைவூட்டி மாணிக்கம் நாராயணன் கடிதம் எழுதியுள்ளார். அஜீத்தே மறந்த இந்த பண விவகாரம் குறித்து அப்போது மாணிக்கம் நாராயணன் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து பகிரங்கப்படுத்தியதால், இந்த விவகாரம் கிணற்றில் போட்ட கல்லானது, தற்போது பணம் கொடுத்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதால் மீண்டும் அதனை மாணிக்கம் நாராயணன் கையில் எடுத்துள்ளதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments