செவ்வாயில் தரையிறங்கியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..! நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்ய பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வூர்தியை, அட்லஸ் என்ற ஏவூர்தி மூலம் கடந்த 7 மாதங்களுக்கு முன் நாசா அனுப்பி வைத்தது.
சுமார் 300 மில்லியன் மைல்கள் பயணித்த அந்த ஆய்வூர்தி பிப்ரவரி 18ல் தரையிறங்கும் எனவும் நாசா அறிவித்திருந்தது.
இந்நிலையில் நாசாவின் ஜெட் ப்ரொப்பல்ஷன் ஆய்வகத் தலைமையகத்தில் இருந்து பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியை அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி சுவாதி மோகன் தலைமையிலான விஞ்ஞானிகள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
உள்ளுர் நேரப்படி நேற்று மாலை 3.55 மணியளவில் பெர்சிவரன்ஸ், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனை நாசா விஞ்ஞானிகள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.
இதன் தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தின் முதல் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பெர்சிவரன்ஸ் எடுத்து அனுப்பியதை நாசா ட்விட்டரில் வெளியிட்டது.
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி, ஒரு டன் எடை கொண்டது. இதில் இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இரு ரோபோ கரங்களும், 19 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
வரும் கோடை காலம் முதல் 30 பாறைகள் மற்றும் மணல் மாதிரிகளைச் சேகரித்து 2030ம் ஆண்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனூடே, இன்ஜெனூட்டி எனப்படும் அதி நவீன ஹெலிகாப்டர் மூலமும் முதன் முறையாக செவ்வாய் கிரகத்தில் சோதனை நடக்க உள்ளது .
Comments