36 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடலில் நீந்தி உலக சாதனை... ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுமி அசத்தல்!

0 3006

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரேபிய கடலில் 36 கி.மீ நீந்தி உலக சாதனைப்படைத்துள்ள 12 வயது சிறுமிக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆட்டிசம் ஒரு நோயல்ல. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தொற்றுநோயும் கிடையாது. ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை `ஆட்டிஸம்  ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’(Autism Spectrum Disorder) என்று மருத்துவ நிபுணர்கள் அழைக்கின்றனர். ஆட்டிஸத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படாத நிலையில் வளர்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் மரபு வழியாகவும் ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன், பழகும் திறன் போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள். 

பெரும்பாலானோருக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினாலும், தெளிவாக மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி பேசமாட்டார்கள். இதனால் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய சரியான புரிதல் சமூகத்தில் இல்லை. இதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் அதே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஜியா ராய்.

இந்திய கடற்படை வீரராக பணிபுரிந்து வருபவர் மதன் ராய். இவரது 12 வயது மகள் ஜியா ராய். மன இறுக்க கோளாறு எனப்படும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர். கடற்படை குழந்தைகள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ஜியா ராய் நீச்சல் பயிற்சியில் கைத்தேர்ந்தவர். தனது நீச்சல் திறமை மூலம் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.

அதற்காக கடந்த புதனன்று அதிகாலை அதிகாலை 3.50 மணிக்கு பாந்த்ரா - வோர்லி கடல் பகுதியில் நீந்த தொடங்கினார். மதியம் 12.30 மணியளவில் இந்தியா கேட் பகுதியை நீந்தியே வந்தடைந்த ஜியா ராய் 36 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்தார். உலக சாதனையுடன் இலக்கை அடைந்த ஜியா ராயை அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து மும்பை நீர் விளையாட்டு சங்கம் சார்பில் சிறுமிக்கு பரிசு கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி எலிஃபாண்டா தீவு முதல் இந்தியா கேட் இடையிலான கடல் பகுதியில் 14 கி.மீ தூரத்தை 3 மணி நேரம் 27 நிமிடங்களில் கடந்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஜியா ராய் உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ள சாதனை நாயகி ஜியா ராய்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments