விறுவிறுப்பான ஐபிஎல் ஏலம்..... கோடிகளில் வாங்கப்பட்ட வீரர்கள் !
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் தென் ஆப்ரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 1000க்கும் அதிகமான வீரர்கள் இந்த ஏலத்திற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அதில் இறுதியாக 125 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 292 வீரர்களை பிசிசிஐ ஏலத்திற்கு தேர்வு செய்தது. காலியாக உள்ள மொத்தம் 61 இடங்களை நிரப்ப 8 அணிகளும் ஏலத்தில் பங்கேற்றன.
சென்னை அணியில் ஸ்பின் பவுலர்கள் குறைவாக உள்ளதால் இங்கிலாந்து வீரர் மொயின் அலியை எடுக்க திட்டமிட்டது. பஞ்சாப் அணியும் அவரை ஏலம் எடுக்க முயன்றது. இறுதியில் சென்னை அணி 7 கோடி ரூபாய்க்கு மொயின் அலியை தன்வசமாக்கியது.
தென் ஆப்ரிக்காவின் 33 வயது வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸை ஏலம் எடுக்க மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் கடுமையாக போட்டியிட்டதால் ஏலத்தொகை உயர்ந்து கொண்டே சென்றது. இறுதியில் கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது.
கிளென் மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை, பெங்களூர் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 14 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. டெல்லி அணி ஸ்மித்தை 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும், பஞ்சாப் அணி டேவிட் மாலனை ஒன்றரை கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.
பஞ்சாப் அணி மூலம் ஜய் ரிச்சர்ட்சன் 14 கோடிக்கும், ஆடம் மில்னே மும்பை அணியால் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். வங்காள தேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.
ஜேசன் ராய், கருணா நாயர், அலெக்ஸ் கெல்ஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ்,ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச், இந்திய அணியின் ஹனுமான் விஹாரி ஆகியோரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.
Comments