கால் டாக்சியில் வந்த அஜித்... டிரைவர் செய்த தவறு... கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான ரகசியம் இதுதான்!
நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகம்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பாதை மாறியதால் கமிஷனர் அலுவலகத்துக்கு அவர் தவறுதலாக சென்றது தெரிய வந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகளிலோ, பொது இடங்களிலோ தலை காட்டாத சுபாவம் கொண்டவர். ஆனால், இன்று அஜித் திடீரென வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திடீரென்று வந்தார். தலையில் தொப்பி, முக கவசம் அணிந்து, கால் சட்டை - டீ -சர்ட் அணிந்து வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்து காவல் துறையினருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
நீங்கள் யார் ... எங்கே செல்ல வேண்டும் ? என பாதுகாப்பு போலீசார் அவரிடத்தில் கேட்டுள்ளனர். அப்போது, தன் முக கவசத்தை கழற்றி விட்டு "ரைபிள் கிளப்" செல்ல வேண்டும் என்று அஜித் அப்பாவியாக கூறியுள்ளார். நடிகர் அஜித்தை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் ஆச்சயர்மடைந்தனர். மேலும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த, பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு நலம் விசாரித்தனர்.
நடிகர் அஜித் எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் "ரைபிள் கிளப்பில்" உறுப்பினராக உள்ளார். இங்குதான், துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறார். அதற்காக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து கால் டாக்சி புக் செய்து வந்துள்ளார். கூகுள் மேப்பை பார்த்து டிரைவர் ஓட்டியுள்ளார். கூகுள் புதிய கமிஷனர் அலுவலக இடத்தை காட்ட வேப்பேரியில் உள்ள புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கால் டாக்சி ஓட்டுநர் அழைத்து வந்துவிட்டார்.
இதையடுத்து, நீங்கள் இடம் மாறி வந்திருப்பதாக கூறிய போலீஸர் நடிகர் அஜித்குமாரை பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ரைபிள் கிளப்புக்கு செல்ல கூறியுள்ளனர். போலீஸாருக்கு நன்றி தெரிவித்து விட்டு அஜித் குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Comments