ஜி.எஸ்.டி. வரம்புக்குள் எரிவாயு... பிரதமர் அறிவிப்பு.!
இயற்கை எரிவாயு விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எந்தவொரு வளர்ச்சி திட்டமானாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், சாத்தியமாகாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் இராமநாதபுரம் இடையே, 143 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 700 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டம், ஓ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயு உற்பத்தி வளாகங்களில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டு நுகர்வோருக்கு எரிவாயுவை குழாய் மூலம் அளிக்க இது உதவும்.
சென்னை மணலி சிபிசிஎல் ஆலையில், 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோலில் இருந்து கந்தகத்தை நீக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி காவிரிப் படுகையில், 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும், 90 லட்சம் டன்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் எரிபொருள் பயன்பாட்டுத் திட்டங்களில் பணியாற்றும் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
இயற்கை எரிவாயு திட்டங்கள், மாசு குறைந்தவையாக இருந்தாலும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க, சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கு முக்கியத்துவமும், ஊக்கமும் அளிக்கப்படுவதாக பிரதமர் கூறினார். எல்இடி பல்புகளை பயன்படுத்துவதன் மூலம், மின்தேவை குறைந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சூரிய ஆற்றல் பயன்பாடு, அதன்மூலமான மின் உற்பத்தி உள்ளிட்ட மாசுமருவற்ற எரிபொருள் பயன்பாட்டுக்கு, ஒரே முகமாக மாற வேண்டியது என்பது, இந்தியர்களாகிய நம் ஒவ்வொரு கடமையாகும் என்றும், பிரதமர் தெரிவித்துள்ளார். எந்தவொரு திட்டமானாலும், மக்களின் ஆதரவு இல்லாவிட்டால், சாத்தியமாகாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டார் காணொலி மூலம் பங்கேற்றனர்.
Comments