தமிழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் பல்வேறு திட்டங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 2304
தமிழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் பல்வேறு திட்டங்கள்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

ராமநாதபுரம் -தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் , பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் பனங்குடியில் காவிரிப்படுகை சுத்திகரிப்பு ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை சார்பில் தமிழகத்தின் மூன்று முக்கியத் திட்டங்களை, காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 144 கிலோமீட்டர் நீளம் கொண்ட குழாய் மூலம் இயற்கை எரிவாயுத் திட்டம் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் மூலம் வீடுகளுக்கும் உர தொழிற்சாலைகளுக்கும் வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மணலியில் சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் திட்ட மதிப்பீடு சுமார் 31 ஆயிரத்து 580 கோடி ரூபாயாகும்.மேலும் பங்குதாரர்கள் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வருங்காலத்தில் மின்சாரம்,வீட்டுத் தேவைகள் போன்றவற்றுக்கான எரிபொருள் போதுமான அளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments