இந்தி தெரியாது போடா.. கபி கபி மேரே தில்லுமே..! திருச்சி சிவாவின் இந்தி கச்சேரி..!
மாநிலங்களவையில் பதவி காலத்தை நிறைவு செய்துள்ள குலாம் நபி ஆசாத்துக்கு தனது வீட்டில் வைத்து பிரிவு உபச்சார விழா நடத்திய தமிழக திமுக எம்.பி திருச்சி சிவா, இந்தி காதல் பாடல்களை பாடி அனைவரையும் மெய்மறக்க செய்தார்.
நீண்ட காலமாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு திமுக எம்.பி திருச்சி சிவா, டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து பிரிவு உபச்சார விழா ஒன்றை நடத்தினார்.
விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ரவிசங்கர்பிரசாத்,முரளிதரன்,பிரகலாஸ் ஜோசி, காங்கிரஸ் எம்.பி கபில் சிபில், திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அந்த விழாவில் பங்கேற்றவர்களை குஷிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் சோர் இந்திப்படத்தின் பாடலை பாடி அனைவரையும் மெய்மறக்க செய்தார் திருச்சி சிவா..!
அவருடன் பாடுவதற்கு பெண் எம்.பி ஒருவர் ஆர்வமாக முன்வந்ததால் தமிழ் எம்.பி வீட்டில் இந்திக்கச்சேரி களை கட்டியது.
தொடர்ச்சியாக 1976 ஆம் வெளியான அமிதாப்பச்சனின் கபி கபி என்ற இந்தி படத்திலிருந்து கபி கபி மேரே தில்லுமே பாடலை திருச்சி சிவா பாட, அவரது குரலில் சக எம்.பிக்கள் மெய்மறந்து தலையாட்டி ரசித்தனர்.
ஊரே இந்தி தெரியாது போடா என்று டி சர்ட் போட்டு மத்திய அரசுக்கு எதிராக டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கினாலும், இசையால் கவரப்பட்ட திருச்சி சிவா நடத்திய இந்த இந்தி கச்சேரியால் புதிதாக கலகம் ஏதும் பிறக்காமல் இருந்தால் சரி..! என்கின்றனர் தமிழ் போராளிகள்.
அதே நேரத்தில் காதலும் கற்று மற என்பது போல இந்தியை கற்று வைத்திருப்பாரோ திருச்சி சிவா என்று அவருடன் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் வியந்து ரசித்துள்ளனர்.
Comments