கொடைக்கானல் : புதுமண தம்பதியுடன் படகு சவாரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில், படகு சவாரியின் போது தடையை மீறி பட்டாசு வெடித்த புதுமண தம்பதியனரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி , கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி பார்க்கும் இடமாக படகு குழாம் உள்ளது. இங்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் நகராட்சி சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை ஏரி அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக , சுற்றுலா வளர்ச்சி கழக படகை திருமண வீட்டார் வாடகைக்கு எடுத்திருந்தனர். படகில் மணமக்களை அழைத்து செல்வதற்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதன்பின் , மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் படகு சவாரியில் சென்றபோது, புஷ்வாணம்,கம்பிமத்தாப்பு, சங்கு சக்கரம் உள்ளிட்ட மத்தாப்புக்களை படகிலேயே கொளுத்தி கொண்டாடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை, மற்ற சுற்றுலாப்பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் வைரலானது. இது பற்றி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாம் மேலாளர், தடையை மீறி நட்சத்திர ஏரியில் படகுசவாரியின் போது பட்டாசுகள் பயன்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
படகு சவாரி செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளனர். ஆனாலும் தடையை மீறி செய்யப்பட்டு வெடி பொருள்களை எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments