புதிய தொழில் கொள்கை வெளியீடு: ரூ.33,465 கோடி முதலீட்டில் 46 திட்டப்பணிகள்..!
புதிய தொழில் கொள்கை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அடிக்கல் நாட்டுதல், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல், முடிவுற்ற திட்டப் பணிகள் என 33,465 கோடி ரூபாய் முதலீட்டில் 46 திட்டப்பணிகளையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அடுத்த 4 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக தொழில் கொள்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 2 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சிப்காட் நிறுவனத்தின் 4 புதிய தொழிற் பேட்டைகள் உருவாக்கவும், தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நாள் தனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முதலீட்டு மானியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டு ஒன்றரை கோடி ரூபாயாக வழங்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
Comments