'இவள்தான் என்னோட மகள்!'- பெருமிதத்துடன் உறவினரிடத்தில் அறிமுகப்படுத்த சென்ற தாயின் உயிரை பறித்த எமன்
கோட்டயம் அருகே பெண் குழந்தையை தத்தெடுத்த 15 நாள்களில் விபத்தில் தாய் இறந்து போக, அந்த குழந்தை கதறி அழுதது காண்போரை உருக வைத்தது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகேயுள்ள செருவந்தூ என்ற ஊரைச் சேர்ந்த ஜாய் மற்றும் சாலி தம்பதிக்கு, திருமணமாகி 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. கொரோனா லாக்டவுன் காரணமாக பெங்களுருவில் தான் பார்த்து வந்த நர்ஸ் வேலையை விட்ட சாலி, சொந்த ஊரில் தன் வீட்டருகே சிறிய கடை தொடங்கினார். இந்த கடையின் பெயர் ஜூவல் என்பதாகும். , குழந்தை இல்லாத இந்த தம்பதி டெல்லியிலிருந்து லட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தையை தத்தெடுத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் லட்சுமி கேரளா வந்தார். தத்தெடுத்த பெற்றோர் குழந்தை லட்சுமிக்கு ஜூவல் என்று பெயர் மாற்றம் செய்தனர். சொந்த ஊரான செருவந்தூருக்கு கொண்டு வந்து தங்க மகளை வளர்க்க தொடங்கினர். ஜூவெலின் வருகையால் அந்த வீடே குதுகலித்தது.
உற்றார், உறவினர்களிடத்துக்கு தங்கள் மகள் ஜூவலை அழைத்து சென்று அறிமுகப்படுத்தி அந்த தம்பதி மகிழ்ந்தனர். உறவினர்களும் தம்பதியையும் அவர்களின் தங்க மகளையும் வரவேற்று விருந்தளித்தனர்.ஆனால், விதி வலியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனில் என்ற உறவினர் வீட்டுக்கு மகள் ஜூவலுடன் சாலி விருந்துக்கு சென்றிருந்தார். பின்னர், இரு சக்கர வாகனத்தில் சாலி வீட்டுக்கு திரும்பிய போது, கார் ஒன்று மோத, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், மருத்துவமனையில் சாலி இறந்து போக, குழந்தை ஜூவல் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டாள்.
கடந்த 15 நாள்களாக தன்னை சீராட்டி தாலாட்டி வளர்த்த தாயின் மறைவை குழந்தை ஜூவலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெற்ற தாயின் முகத்தை காணாத அந்த சிறுமி வளர்த்த தாயின் முகத்தோடு முகம் வைத்து அழுது கொண்டிருந்தது காண்போரை கண்ணீர் விட வைத்தது. பிறந்த தாய் முகத்தை பார்த்த்திராத குழந்தை ஜூவல் தத்தெடுத்த தாயை 15 நாள்களில் பறிகொடுத்தது உறவினர்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கியது.
Comments