பார்த்தால் பால் வியாபாரம்... பறந்தால் ஹெலிகாப்டர்- மகாராஷ்டிராவை வியக்க வைத்த பால் வியாபாரி!
மகாராஷ்டிராவின் பிவாண்டி நகரத்தைச் சேர்ந்த விவசாயியும் பால் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோரான ஜனார்த்தன் போயிர் என்பவர் தனது வணிக பயன்பாட்டுக்காக நாடு முழுவதும் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
விவசாயிகள் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும்தான், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்குக் கூட வழியில்லாமல் கடனில் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான், மகாராஷ்டிர மாநிலம், பிவாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயியும் பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போரி 30 கோடி ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.
ஜனார்த்தன் போரி விவசாயம் மற்றும் பால் வியாபாரம் மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியின் முக்கிய தொழில் முனைவோராகக் கருதப்படும் ஜனார்த்தன் அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்வார். பயண நேரத்தைக் குறைத்து தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இதற்காகத் தனது வீட்டுக்கு அருகே சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஹெலிக்பேட், பைலட் அறை மற்றும் தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்துள்ளார். இப்போது ஊர் முழுக்க ஜனார்த்தன் போரியின் ஹெலிகாப்டர் பற்றிய செய்தியே பேசுபொருளாக உள்ளது.
ஹெலிகாப்டர் வாங்கியுள்ளது குறித்து, "எனது வணிகப் பயன்பாட்டுக்காக நான் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. வணிகத்தைப் போலவே எனது பால் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்காகத் தான் நான் ஒரு ஹெலிகாப்டரை வாங்கியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதி முக்கிய தொழிலதிபர்கள் பலர் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. செல்வச் செழிப்பு மிக்க பகுதியாகக் கருதப்படும் பிவாண்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் காடிலாக் காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments