பேக்கரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கரடிகளில் ஒன்று கைது... காட்டில் ஜாமீனில் விடுவிப்பு!

0 9522

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராத்தில், பேக்கரியில் பொருட்களை நாசம் செய்து வந்த 3 கரடிகளில் ஒரு கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீபகாலமாக , இந்த கிராமத்தில்
கரடிகள் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தை சுற்றிலும், பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இக் கிராமத்தில் முகமது உசேன் என்பருக்கு சொந்தமான பேக்கரிக்குள், இரவு நேரங்களில் புகும் கரடிகள் அங்கு உள்ள உணவு பொருட்களை தின்றும் சேதப்படுத்தியும் வந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் வனத்துறையினர், அட்டகாசம் செய்து வந்த கரடிகளைப் பிடிக்க,  பேக்கரி அருகே கூண்டு வைத்தனர். கூண்டிற்குள் கரடிகளின் விருப்ப உணவான பழவகைகளை வைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அதிகாலை ஒரு மணி அளவில் அங்கு வந்த மூன்று கரடிகளில், ஒரு கரடி மட்டும் கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் சிக்கிய கரடி ஆக்ரோஷத்துடன் சத்தம் போட மற்ற இரண்டு கரடிகளும் அதனை கண்டு தலை தப்பியது தம்புரான் புண்ணியம் என்பது போல ஓட்டம் பிடித்தன.

இதனையடுத்து வனத்துறையினர், கரடியை கூண்டோடு வாகனத்தில் ஏற்றி, அப்பர் பவானி பகுதிக்கு கொண்டு சென்று, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கூண்டில் ஒரு கரடி மட்டும் சிக்கி, மற்ற இரண்டு கரடிகள் தப்பிச் சென்றதால், மீண்டும் கரடிகளின் தொல்லை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து கூண்டு வைத்து மற்ற கரடிகளையும் பிடிக்க வேண்டும் என மிளிதேன் கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments