தனியுரிமை வழக்கு : வாட்ஸ் ஆப், பேஸ்புக் பதிலளிக்க உத்தரவு
பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களின் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிரான வழக்கில் அந்த நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பெரிய நிறுவனமாக பேஸ்புக் இருந்தாலும் மக்களின் தனியுரிமையை காப்பது நீதிமன்றத்தின் கடமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாட்ஸ்ஆப் பயனாளர்கள் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வது கட்டாயம் என அதன் தனியுரிமைக் கொள்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கை பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கெனவே தரவுகளை பேஸ்புக் எடுத்துக்கொள்வதாகப் பயனாளர்களுக்கு ஐயம் இருந்தது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைக்குத் தடை விதிக்கவும், பொதுமக்களின் தனியுரிமையைக் காக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்த மனுவைத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது பேஸ்புக் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒரு தனியுரிமைக் கொள்கையும், இந்தியாவுக்கு மற்றொரு தனியுரிமைக் கொள்கையும் வைத்துள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பயனாளர்களின் தரவுகளை நிறுவனங்கள் பகிரக் கூடாது என்றும், தரவுகள் காக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தரவுகளைப் பகிர்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனம் மறுத்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் ஒரே தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, இரண்டு அல்லது மூன்று லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பெரிய நிறுவனமாக பேஸ்புக் இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் தனியுரிமை மதிப்பு வாய்ந்தது என்றும், அதைக் காப்பது நீதிமன்றத்தின் கடமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தங்கள் தரவுகள் பகிரப்படுவதால் தனியுரிமை பாதிக்கப்படுவதாக மக்கள் அஞ்சுவதாகத் தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.
Comments