'ரசிகர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார்!' - நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி புலம்பல்

0 55331

எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்பனை செய்யவே, அரசியலுக்குள் வருவது போல போக்கு காட்டி வந்ததாக ரஜினி மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட துணை செயலர் ஆர்.எஸ் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட துணை செயலர் ஆர்.எஸ்.ராஜன், சிறுபான்மை பிரிவு இணை செயலர் சதீஷ்பாபு, மகளிரணி செயலர் ஈஸ்வரிமதி, ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், கட்டுப்பாட்டை மீறி, ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, ரஜினி மக்கள் நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆர்.எஸ். ராஜன் , ரஜினி கட்சி தொடங்கப் போவதில்லை என்றும் அரசியலில் குதிக்கப் போவதில்லை என்றும் அறிவித்ததில் இருந்தே கடும் அதிருப்தியில் இருந்தார். ரஜினி கட்சி தொடங்காவிட்டால், தானே அவரின் பெயரில் கட்சியை தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். பிப்ரவரி 15-  ஆம் தேதி வரைதான் ரஜினிக்கு டைம் என்றும் ஆர்.எஸ் . ராஜன் எச்சரித்திருந்தார். பின்னர், ரஜினி மன்ற தலைமை அவரிடத்தில் நேரடியாக பேசி சமாதானப்படுத்தியதாக கூறி, ரஜினி பெயரில் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார். இந்த நிலையில்தான், ரஜினி மன்ற பதவியிலிருந்து  அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, ஆர்.எஸ்.ராஜன் கூறியதாவது,  '' கடந்த 1986ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன். 2017 டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக, ரஜினி அறிவித்தார். இதனால், நான் காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்த, மாநில விவசாய அணி செயலர் பதவியை ராஜினாமா செய்தேன்.தற்போது ரஜினி, என்னை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை, 800 கோடி ரூபாய்க்கு விற்க, அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி தொடக்கம் என்று அறிவித்தது . கல்லா கட்டுவதில்தான் அவர் குறியாக இருந்தார்.

உயிரே போனாலும் தமிழக மக்கள் நலன்தான் முக்கியம் எனக் கூறியவர், பொய்யாக மருத்துவமனையில் படுத்து கொண்டார். என்னை நீக்கியதை நான் சும்மா விடப்போவது இல்லை.இது, என் மனதை பாதித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் பெயரில், 13.50 லட்சம் ரூபாய்க்கு நற்பணிகள் செய்துள்ளேன். மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் . தனது படம் வெற்றி பெற மட்டுமே ரசிகர்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். எங்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கி விட்டார்'' என்று புலம்பி தள்ளியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments