கோவையில் அதிமுக சார்பில் 123 ஏழை, எளிய ஜோடிகளுக்கு திருமணம்: மணமக்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி, இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வாழ்த்து
கோவையில் 123 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்திவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என பெருமிதம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, 73 வகை சீர்வரிசைப் பொருட்களுடன், 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவரவர் மத வழி முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள் உள்ளிட்ட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார்.
விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறழாமல் அப்படியே நடைமுறைப்படுத்தும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் எனக் குறிப்பிட்டார். விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி, திருமணம் செய்த மணமக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு திருமண மேடையே சாட்சி என்று குறிப்பிட்டார்.
Comments