அந்த 7 நிமிடப் போராட்டம் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியை வாழ்வா? சாவா என்ற நிலைக்குத் தள்ளி விடும் -வெளியான தகவல்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி எவ்வாறு அங்கு தரையிறக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை அங்கு குடியேறச் செய்யும் சாத்தியங்கள் உள்ளனவா என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய ஆய்வு நோக்கங்களுக்காக இதுவரை 4 ஆய்வூர்திகளை நாசா அனுப்பியுள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கோளை ஆய்வு செய்ய நாசா அனுப்பியுள்ள 5ஆவது ஆய்வூர்தியான பெர்சிவரன்ஸ் (Perseverance) மூன்றே நாட்களில் செவ்வாயில் தரையிறங்க உள்ளது. ஏறக்குறைய ஏழு மாதங்களில் 300 மில்லியன் மைல்கள் பயணித்துள்ள இந்த ஆய்வூர்தியை, சுமார் 40 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் தரையிறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாயின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழைந்ததும் அதனுள் இருக்கும் காப்சூல் எனப்படும் கோள வடிவிலான அமைப்பு சுமார் 12 ஆயிரம் மைல் வேகத்தின் பயணிக்கும். அப்போது அதன் வெளிப்புறத்தின் வெப்பநிலை 2 ஆயிரத்து 370 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
செவ்வாயில் காணப்படும் மாறுபட்ட அடர்த்தியைக் கையாளவும், வேகத்தைக் குறைக்கவும் கேப்சூலில் இருக்கும் பாராசூட் விரிந்து வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
அதன்பின்னர், காப்சூலில் இருக்கும் ரோவர் தனியாகப் பிரிந்து செல்லும். செவ்வாயில் ஆய்வூர்தி தரையிறங்கும்போது நொறுங்கி விடாமல் இருப்பதற்காக, ஜெட்பேக் முறையைப் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.
தரைப்பகுதியில் இருந்து 70 அடி உயரத்தில் பெர்சிவரன்ஸை, ஸ்கை கிரேன் என்ற நைலான் கயிறுகள் மூலம் ரோவர் மெதுவாக விடுவிக்கும். ஒன்றரை மைல் வேகத்தில் இந்த நிகழ்வை நடத்தியபின், ரோவர் தனது பாதைக்குத் திரும்பிச் சென்றுவிடும்
பின்னர் பெர்சிவரன்ஸ், அங்கிருந்து மெதுவாக நகன்று சென்று, ஜெசீரோ கிரேட்டர் பள்ளத்தில் தனது ஆய்வை மேற்கொள்ளவிருக்கிறது.
காப்சூலில் இருந்து பெர்சிவரன்ஸ் தரையைத் தொடுவதற்கு எடுத்துக் கொள்ளும் அந்த 7 நிமிடப் போராட்டம் அந்த ஆய்வூர்தியை வாழ்வா? சாவா என்ற நிலைக்குத் தள்ளி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Comments