நில அபகரிப்பு முயற்சியில் சிக்கிய சிறுத்தைகளை வறுத்தெடுத்த நீதிமன்றம்..! தலைவர்களுக்கும் உத்தரவு
விடுதலை சிறுத்தை கட்சியினர் மீதான நில அபகரிப்பு புகார் மனு தொடர்பான விசாரணையில், நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் தொண்டர்களை அதன் கட்சி தலைவர்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வார்த்தைகளால் சிறுத்தைகள் தாக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னையில் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் தொடங்கி சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டும் உரிமையாளர்கள் வரை அனைவரையும் தங்கள் அதிகார பலத்தால் மிரட்டி உருட்டி மாமூல் பெறுவதை சில அரசியல் கட்சியினர் தொழிலாகவே செய்து வருவது நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் ஆவடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தான் வீடுகட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தங்கராஜ், அம்புரோஸ், காவேரி உள்ளிட்ட 14 பேர் தடுப்பதாகவும் கூறியிருந்தார்.
தங்களுக்கு தேர்தல் செலவுக்கு நிதி வேண்டும் என்று கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்ததால் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசியல் கட்சியினரின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன் படி அரசியல் கட்சியின் பெயரை சொல்லி தேர்தல் செலவுக்கு பணம் கேட்பது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,
மனுதாரரான தனசேகரனுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கவும், நில அபகரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆவடி துணை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்
நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் கட்சி தொண்டர்களை அதன் தலைவர்கள் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும்,
கட்டுப்படுத்த தவறினால் கட்சியின் நற்பெயரில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.
வழக்கமாக இது போன்ற புகார்களை சிவில் வழக்கு என்று காவல்துறையினர் இழுத்தடிப்பது வழக்கம். நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவின் மூலம் நில அபகரிப்பு புகார்கள் மீது காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
Comments