பிரதமர் இன்று சென்னை வருகை..!
இன்று சென்னை வரும் பிரதமர் மோடி 4 ஆயிரத்து 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி வருகிறார். 3 ஆயிரத்து 770 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீளமுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
293 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சென்னை கடற்கரை -அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதை திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். 423 கோடி ரூபாய் மதிப்பில் மின்வழித் தடமாக மாற்றப்பட்ட விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அர்ஜீன் போர் டாங்கியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, 2 ஆயிரத்து 640 கோடி மதிப்பில் கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பில் சென்னையை அடுத்த தையூரில் 2 லட்சம் சதுர மீட்டரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆராய்ச்சி வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பயணிக்கும் பாதைகளில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் பிரதமர் மோடி பிற்பகலில் கொச்சி செல்கிறார்.
Comments