”7ஆம் கட்ட கீழடி அகழாய்வு பணி” 1100 உதவி எண் திட்டம் தொடக்கம்: பயிர்க்கடன் தள்ளுபடியும் தொடங்கியது..!
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் 1100 உதவி எண் திட்டம், 7ஆம் கட்ட கீழடி அகழாய்வு பணி ஆகியவற்றை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். அதற்கான ரசீதுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடிசெய்யப்படும் என்ற அறிவிப்பினைசெயல்படுத்தும் வகையில், 9 விவசாயிகளுக்குபயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி, முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து, விரைந்து தீர்வு காணும் வகையில், "முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்த திட்டம், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், ராஜீவ் காந்தி சாலையில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முதலமைச்சரின் உதவி அழைப்பு மையத்தையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வாயிலாக தெரிவிக்கலாம், ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும், வேலைவாய்ப்பு கோரும் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு பெற்றிட வழிவகை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Comments