'அம்மா என்னை காப்பாத்து..!’ - கிணற்றிலிருந்து கேட்ட குழந்தையின் கதறல்... ஒரு மணி நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய வீரர்கள்!
சிரியா நாட்டில், விளையாடும்போது தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்த நான்கு வயது குழந்தையை சிரியா பாதுகாப்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சிரியா நாட்டின் அலெப்பே பிரதேசத்தில் அமைந்துள்ளது, அல்-பாப் நகரம். இந்த நகரத்தில், தன் வீட்டுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்தார் சுமையா எனும் நான்கு வயது குழந்தை. அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, வீட்டுக்கு அருகே குடிநீருக்காக வெட்டப்பட்டிருந்த குறுகிய அகலமே கொண்ட ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை அலறினார். அப்போது, கிணற்றிலிருந்து எழுந்த ‘அம்மா... அம்மா என்னை காப்பாத்து’ எனும் அபயக்குரலைக் கேட்டதும் வீட்டுக்கு உள்ளே சமைத்துக்கொண்டிருந்த சுமையாவின் தாய் ஓடிவந்தார். கிணற்றுக்குள் விழுந்து பயத்தில் அழுதுகொண்டிருந்த சுமையாவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுடன் சேர்ந்து மீட்க முயற்சி செய்தார்.
அந்த கிணறு மிகவும், குறுகலாக, கரடுமுரடாகக் காணப்பட்டதால் சுமையாவை அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து, அலெப்பே பிரதேச White helmets என்று அழைக்கப்படும் பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விரைந்து வந்த பாதுகாப்புப் படை வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர்.
கிணற்றின் ஆழத்தில் இருட்டில் நின்றுகொண்டு, பயத்தில் அழுதுகொண்டிருந்த சுமையாவை பாதுகாப்புப் படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மேலே தூக்கி வந்தனர். குழந்தை வெளியே வந்ததும், “எனது பொம்மை எங்கே?” என்று கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிணற்றுக்குள் விழுந்த ஒரு மணி நேரத்துக்குள் சிறுமியை மீட்ட அலெப்பா பாதுகாப்புப் படை வீரர்களை பல தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். கிணற்றுக்குள் விழுந்த சிறுமி தற்போது நலமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது...
Comments