சாத்தூர் விபத்து: வெடித்த பட்டாசுகள்.... பறி போன உயிர்கள்!

0 4929

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 15 பேர் பலியான நிலையில், மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அந்த ஆலையை சக்திவேல் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில், 30க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு அறையில் வெடிகளுக்கான மருந்தை உட்செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் பயங்கரமாக வெடித்தன. அதனால் 15க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரை மட்டமாகின.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும், 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்ற வீரர்கள், தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 34 பேர் படுகாயங்களுடன் சாத்தூர்,சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

எஸ்பி பெருமாள், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார்.

இதனிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments