விரைந்து படைகளை விலக்கும் சீனா: அமைதி திரும்புவதற்கு முன்னோட்டம்?

0 2039
விரைந்து படைகளை விலக்கும் சீனா: அமைதி திரும்புவதற்கு முன்னோட்டம்?

கிழக்கு லடாக் எல்லையில், பாங்காங்சோ ஏரியின் கரைகளில் இருந்து, எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக முன்களப் படைகளை சீனா விலக்கி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படைவிலக்கம் முடிவடைந்த 48 மணி நேரத்திற்குள் நடைபெறும் அடுத்த சுற்று பேச்சில், தெப்சாங் சமவெளி உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி, பாங்காங் ஏரியின் வடகரை, தென்கரைப் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா உடன்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார். அதன்படி படைவிலக்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

பாங்காங்சோ ஏரிப் பகுதியில், முழுமையாகப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, 48 மணி நேரத்தில் ராணுவ மூத்த கமாண்டர்கள் நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அந்த பேச்சுவார்த்தையில் மற்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியின் பெயரையும் ராஜ்நாத் சிங் குறிப்பிடாத நிலையில், தெப்சாங் சமவெளி, கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ், டெம்சோக் ஆகிய பகுதிகள் குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை சீனா, பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் இருந்து 200 முக்கியமான போர் டாங்குகளை திரும்பப்பெற்றுள்ளது. ஃபிங்கர்-8 பகுதிக்கு கிழக்கே சீன வீரர்கள் திரும்பும் வகையில், 100 கனரக வாகனங்கள் படைவிலக்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீனா, எதிர்பார்த்ததைவிட விரைவாக படைகளை விலக்கிக் கொள்வது இந்திய தரப்பில் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை காலையே படைகளை விலக்கிக் கொள்ளும் பணியை சீனா தொடங்கிவிட்டது என்றும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பின்புலப் பேச்சுகளின் மூலமும், கிழக்கு லடாக்கில் தனது நிலையில் இந்தியா உறுதியுடன் இருந்ததாலும் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் எல்லையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைக்கு திரும்புவது என்ற அடிப்படையில் படை விலக்கம் முதல் கட்டமாகத் தொடங்கியுள்ளதாகவும், அதன்படி சீனா ஃபிங்கர் 8 பகுதிக்கு கிழக்கேயும், இந்தியா ஃபிங்கர் 3 பகுதிக்கும் திரும்பும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments