மதுரை : ஸ்பாட்டில் ரூ.1 லட்சம்... விவசாயி கடனை அடைக்க உதவிய அமைச்சர்!
மதுரை அருகே கடனால் வீட்டை ஜப்தி செய்த வங்கி ஊழியர்கள்,வந்த நிலையில், விவசாயி குடும்பத்துக்கு ஸ்பாட்டில் ரூ.1 லட்சம் கொடுத்து வீட்டை ஜப்தியில் இருந்து மீட்க அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உதவியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவுக்குட்பட்ட டி. கல்லுப்பட்டி ஒன்றியம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி தன் மகள் திருமண செலவு மற்றும் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்று அந்த கடனை திரும்பி செலுத்தி வந்தார். கொரோனா நோயால் கேரளாவில் பணியாற்றிய அவரின் மகனுக்கு வேலை பறிபோனதால், போதிய வருவாயின்றி செல்வராஜ் தவித்துள்ளார். இதனால், வங்கியில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இந்நிலையில் . கடன் வழங்கிய வங்கி நீதிமன்றத்தை அணுகி, சொக்கம்பட்டியில் உள்ள செல்வராஜ் வீட்டை ஜப்தி செய்ய அனுமதி பெற்றனர். பின்னர், நீதிமனற ஊழியர்களுடன், வங்கி பணியாளர்கள் செல்வராஜ் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் இருந்தவர்களை வெளியேறும்படி வங்கி அதிகாரிகள் கூறியதால் செய்வதறியாமல் செல்வராஜ் திகைத்தார். வங்கி பணியாளர்களிடம் குடும்பத்தினர் சிறிது கால அவகாசம் கேட்டு மன்றாடினர். பாக்கி பணம் செலுத்தாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என வங்கி ஊழியர்கள் கறாராக கூறி விட்டனர்.
அப்போது கள்ளிக்குடி புதிய வட்டாச்சியர் அலுவலக பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அந்த வழியே தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரில் சென்றார். விவசாயி செல்வராஜ் வீட்டின் முன் கூட்டமாக மக்கள் இருப்பதை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார். அமைச்சரிடத்தில் தன் நிலையை செல்வராஜ் கண்ணீருடன் கூறினார்.
இதனால் , காரைவிட்டு கீழே இறங்கிய அமைச்சர் விவசாயிக்கு பணம் செலுத்த அவகாசம் தரும்படி வங்கி அதிகாரிகளிடத்தில் கூறினார். குறிப்பிட்ட ஒரு தொகையாவது இப்போது கட்ட வேண்டும் என வங்கி பணியாளர்கள் அமைச்சரிடத்தில் கூறினர். உடனடியாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தான் வைத்திருந்த ரூ. 1 லட்ச ரொக்க பணத்தை கொடுத்து உதவியதுடன், வங்கி ஊழியர்களிடம் பேசி கடன் செலுத்த கால அவகாசமும் பெற்று கொடுத்துள்ளார்.
கடனால் வீட்டைவிட்டு வெளியேற்றபட இருந்த விவசாயி செல்வராஜ் குடும்பத்தை உரிய நேரத்தில் காப்பாற்றிய நெகிழ்ச்சியான நிகழ்வை பார்த்த பொதுமக்கள் மற்றும் செல்வராஜின் குடும்பத்தினர் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர். பின்னர், அவருடன் செல்பியும் எடுத்தனர்.
Comments