ஞாயிறன்று பிரதமர் வருகை... 6,000 போலீசார் பாதுகாப்பு..!
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் மோடி நாளை மறுநாள் வருவதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து அடையார் ஐஎன்எஸ் விமானத் தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து, பின்பு சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைப்பதுடன், கல்லணை கால்வாய் புதுப்பிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை கடற்கரையில் இருந்து அத்திப்பட்டு வரையிலான 4-வது ரெயில் வழித்தடம் தொடக்கம் மற்றும் அர்ஜூன் எம்.பி.டி. மார்க்-1ஏ ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைத்தல், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்துக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவையும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் வருகையையொட்டி, அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கில் முழு வீச்சில் பராமரிப்பு பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன. வண்ண வண்ண அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி மரக்கிளைகள் வெட்டப்பட்டு, தடுப்பு வேலி அமைக்க மரக்கம்புகள் நடப்பட்டுள்ளன. பிரதமர் வருகையையொட்டி அப்பகுதிகள் சாலைகள் பளிச்செனக் காணப்படுகிறது.
சென்னை வரும் பிரதமருக்கு வழிநெடுகிலும் உற்சாகமான வரவேற்பு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விமான நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
Comments