சாப்பாட்டுக்கு கூப்பாடு.. கிடைத்த சாப்பாட்டை குப்பையில் வீசும் அவலம்..! இதற்கு ஏன் பிச்சை எடுக்கனும்?

0 19668
சாப்பாட்டுக்கு கூப்பாடு.. கிடைத்த சாப்பாட்டை குப்பையில் வீசும் அவலம்..! இதற்கு ஏன் பிச்சை எடுக்கனும்?

ஒரு வேளை உணவுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் மக்களுக்கு மத்தியில், உழைக்காமல் சோம்பேறியாக அமர்ந்து, மக்களிடம் யாசகம் பெற்ற நூற்றுகணக்கான சாப்பாடு பொட்டலங்களை யாருக்கும் உபயோகமில்லாமல் உள்ளூர் பிச்சைக்காரர்கள் குப்பையில் வீசிச்சென்ற சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

இந்த வையகத்தில் ஒரு வாய் சோற்றுக்கு கூட வழியில்லாமல் பலர் பசியால் ஏங்கும் நிலையில், பசிக்கும் வயிற்றுக்கு உண்ண உணவளித்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் ஒன்று திருச்சியில் அரங்கேறி இருக்கின்றது..!

தை அமாவாசையையொட்டி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடும் உறவினர்கள், யாசகம் கேட்போருக்கு முன்னோர்களுக்கு படைப்பது போல பொட்டலம் பொட்டலமாக உணவை அள்ளி வழங்கிச் சென்றனர்

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் முடித்து வருபவர்களிடம் கையேந்தி பிச்சை கேட்க வரிசை கட்டி அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு அங்கு வந்து சென்றவர்கள், யாசகமாக உணவுப் பொட்டலங்களை கொடுத்துச்சென்றனர்.

பசிக்கு மேல சாப்பிட ஒவ்வொரு இட்லியும் அடுத்தவரோடதுன்னு சொன்னத மதிக்காமல் ஒவ்வொருவரும் தங்கள் கை கொள்ளா அளவிற்கு உணவுப் பொட்டலங்களை யாசகமாக பெற்றுக் கொண்டனர்

அந்த உணவுப் பொட்டலங்களை தங்களுக்கு அருகில் வைக்க இடமில்லாமல், அதனை உண்ணவும் மனமில்லாமல், அனைத்தையும் ஒவ்வொருவராக குப்பைத் தொட்டியில் வீசிச்சென்றனர்

ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் யாருக்கும் பயனளிக்காமல் குப்பைத் தொட்டிக்கு சென்றது அவலத்தின் உச்சம்..!

தாங்கள் பணத்தை எதிர்பார்த்து யாசகம் கேட்டதாகவும், ஆனால் பெரும்பாலானவர்கள் உணவுப் பொட்டலங்களை யாசகமாக கொடுத்து விட்டுச்சென்றதால் அதனை சாப்பிட இயலாது என்பதால் குப்பையில் வீசுவதாக தெரிவித்தனர்.

ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாதவர்கள் தான் பிச்சை எடுப்பார்கள் என்ற நிலை மாறி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின இந்தக் காட்சிகள்...

வயது முதிர்ந்து ஆதரவின்றி தவிப்போர் சாப்பாட்டிற்காக யாசகம் பெற்று வாழ்ந்துவந்த நிலையில், தற்போது பிச்சை எடுத்து பணம் சேர்க்கும் சோம்பேறிகள் பெருகிவிட்டனர் என்பதை குப்பையில் வீசப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சற்று அழுத்தமாக உணர்த்தி இருக்கின்றது.

உணவு வழங்கும் எண்ணம் கொண்டோரிடம் உணவுப் பொட்டலங்களை சேகரித்து, உணவு தேவைப்படும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொண்டு சேர்த்தால் அங்குள்ளவர்கள் ஒரு வேளை உணவை வயிறாற உண்ட திருப்தி கிடைக்கும். வரும் காலங்களில் இதுபோன்ற முயற்சியை சமூக சேவை அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

அதே நேரத்தில் பசித்தால் அள்ளி சாப்பிடுவதற்கு சில்லரை காசுகள் ஒன்றும் சீரகசம்பா சோறு அல்ல என்பதை இந்த சோம்பேரிகளுக்கு உணரவைக்க வேண்டியதும் அவசியம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments