பள்ளி மாணவனை வேட்டையாடிய ப்ரீ பயர் அரக்கன்..! விபரீதத்திற்கு தடை எப்போது?
திருவள்ளூர் அருகே, ப்ரீபயர் விளையாட்டிற்கு அடிமையான 8 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் அரக்கனாக மாறியுள்ள ப்ரீ பயர் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
தமிழகத்தில் ஆன் லைன் வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும் ஏராளமான மாணவர்களை வயது பேதமின்றி அடிமைகளாக்கி இருப்பது ப்ரீ பயர் என்னும் ஆன் லைன் விளையாட்டு..! மரத்தடியிலும், குட்டிசுவர் மறைவிலும் கும்பலாக அமர்ந்து ஆளுக்கொடு ஸ்மார்ட் போனில் விளையாட்டு என்ற பெயரில் மூளையோடு சேர்த்து கண்களுக்கும் இலவசமாக தீவைத்து கொண்டிருக்கின்றனர் நம்ம ஊர் பாய்ஸ்..!
மாணவர்களுக்கு இடையே குழு மோதலை உருவாக்குதல், படிப்பில் கவனசிதறலை உண்டாக்கி அவர்களது வாழ்வில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் விபரீத அரக்கனாக மாறியுள்ள ப்ரீ பயர் விளையாட்டால் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளான 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் நடந்திருக்கின்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி என். ஜி. ஓ நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பாபு என்பவரின் மகன் ராகேஷ்.
தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த ராகேஷ் ஆன்லைன் வகுப்புக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட ஸ்மாஃர்ட் போன் மூலம் ஆன்லைனில் ப்ரீ பயர் விளையாட தொடங்கியுள்ளான். ஆர்வம மிகுதியால் எப்போதும். கைபேசியில் ப்ரீ பயர் விளையாடி வந்த ராகேஷ் ஒரு கட்டத்தில் அடிமையானதாக கூறப்படுகின்றது.
விளையாட்டில் போதுமான பாயிண்டுகளை சேர்க்க இயலாமல் தவித்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த மாணவன் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராமல் இருந்துள்ளான்.
சந்தேகமடைந்த அவனது பெற்றோர் மாடிக்குச் சென்று பார்த்தபோது. அங்கிருந்த அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள சீலிங்கில் அம்மாவின் சேலையில் மாணவன் ராகேஷ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் ஒரே மகன் உயிரிழந்தை கண்டு பெற்றோர் செய்வதறியாது பரிதவித்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்து. சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ப்ரீ பயர் விளையாட்டால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் தவித்துக் கொண்டு இருந்த மாணவன் ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து உயிர் பலி வாங்கிய ஆன் லைன் ரம்மி சூதாட்டத்திற்கு இணையாக, ப்ரீ பயர் ஆன் லைன் விளையாட்டும் மாணவர்களின் மனதையும் உடல் நலத்தையும் கெடுத்து வந்த நிலையில் உயிர்பலி வாங்க தொடங்கி இருப்பதால், அதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதே தமிழக பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments